தென்குமரிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் இடையறாத கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

திருவைகுண்டம் அணைக்கட்டு வழியாக தற்போது 11,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஆற்றுப்படுகை மற்றும் கரையோர கிராமங்கள் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இன்று (24.11.2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிக்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அவர் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் பாதுகாப்பு, கீழ்நீர் பகுதிகளுக்கு தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றை விரைவாக செயல்படுத்த அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.