தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் காரியாலயம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டு, பிரச்சாரம் உற்சாகமாக தொடங்கப்பட்டது.
எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள கூட்டணி தேர்தல் காரியாலயத்தை, திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சரும், தூத்துக்குடி தொகுதி கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் பேசுகையில் கனிமொழி எம்பி, “தூத்துக்குடி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் கீதாஜீவன். மக்கள் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் திறன் கொண்டவர். கடந்த ஐந்து ஆண்டுகளில் மாவட்ட வளர்ச்சியில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என்றார்.
முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “கனிமொழி எம்பி பிரச்சாரத்தை தொடங்கி வைப்பது பெரும் மகிழ்ச்சி. தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளதால், அனைவரும் ஒன்றிணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்கையும் கூட்டணிக்கு பெற்றுத் தர வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்பி, கீதாஜீவன் மற்றும் கூட்டணி தலைவர்கள் பிரச்சார வாகனத்தில் ஏறி, போல்பேட்டை, ஸ்டேட் பேங்க் காலனி, சுந்தசாமிபுரம், முத்தம்மாள் காலனி, ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகம் ஏற்படுத்தினர்.