தென்காசி மாவட்டத்தில் குழந்தை நேய சூழலை உருவாக்கும் நோக்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், தென்காசி சார்பில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழு சிறப்பு கூட்டம் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.


மாவட்ட ஆட்சித் தலைவர் திரு கமல் கிஷோர், ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாண்புமிகு தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் ஆணைய உறுப்பினர்கள் திருமதி உஷா நந்தினி மற்றும் திருமதி ஜெயசுதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த குழந்தைகள் நலன் பணியாளர்கள் பங்கேற்று, “குழந்தை நேய தென்காசி மாவட்டம்” உருவாக்குவதற்கான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்தனர். குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளான போக்சோ குற்றங்கள், குழந்தை தொழிலாளர் முறை, இளம் வயது கர்ப்பம், கல்வி இடைநிற்றல், குழந்தைகளிடையே போதைப் பழக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மாதவன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு ஜெயச்சந்திரன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திரு அலெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் தூத்துக்குடி கவிஞர் நிலன் கனகராஜ் எழுதி, சாம் இசையமைத்து, சரியா ஹிந்தி ஸ்டீபன்சன் பாடிய போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பாடல் சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது.


மேலும், தென்காசி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழந்தைகள் நலன் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருவதற்காக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், அலுவலக பணியாளர்கள் மற்றும் குழந்தை நலக்குழு தலைவர், உறுப்பினர்களுக்கு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.