தூத்துக்குடி சிவன் கோவிலில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்று மாலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.


இந்த சந்திப்பில் தலைமைக் குருக்கள் செல்வம் பட்டர், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், செயல் அலுவலர் தமிழ்செல்வி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.


வரும் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10.40 மணி முதல் 11.10 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்று விழாவுடன் சித்திரைப் பெருந்திருவிழா துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் இரவு நேரங்களில் கலையரங்கில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.


விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 30ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பாண்டிச்சேரி, விருதாச்சலம், கரூர் பகுதிகளில் இருந்து வரும் சிவ தொண்டர்களின் வாத்தியங்கள், தேவார இன்னிசை, வேதபாராயணம் ஆகியவை ஒலிக்க, யானை, குதிரை அணிவகுப்புகள், மகளிர் கோலாட்டம், மயில் ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் தேர்பவனி சிறப்பாக நடைபெறும்.


சிறிய தேரில் ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ முருகப்பெருமான் எழுந்தருள, பெரிய தேரில் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் ரதவீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த திருவிழாவில் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் அனைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு திருக்கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.