முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ள நிலையில், அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட கழக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், முடிவுற்ற பணிகள் திறப்பு விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளார்.
அதன்படி, பிப்ரவரி 24ஆம் தேதி காலை 10 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் அவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான மற்றும் உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மக்கள் பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அணி அமைப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், பூத் டிஜிட்டல் முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு அமைச்சர் கீதாஜீவன் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.