தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசை கண்டித்து, மாநிலம் தழுவிய அளவில் பல இடங்களில் செவ்வாய்க்கிழமையான இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில், தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர், முன்னாள் எம்பி டாக்டர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.


அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் முழுவதும் பல இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக ஆட்சி காலத்தில் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லவே இந்த போராட்டம்,” என்றார்.


மேலும், “தூத்துக்குடியில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டும் காவல்துறை ஒதுக்குப்புற இடத்தில் அனுமதி வழங்கியுள்ளது. கம்யூனிஸ்ட் போன்ற சிறிய கட்சிகளுக்கு முக்கிய இடங்களில் அனுமதி வழங்கி, நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜகவை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்,” என கடுமையாக கண்டித்தார்.


தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம், ஊழல் நிறைந்த ஆட்சி தான் இந்த திமுக ஆட்சி. கல்லூரிகளில் நடைபெற்ற பாலியல் குற்றங்களில் ‘யார் அந்த சார்?’ என்று பாஜக கேள்வி எழுப்பியதால்தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்,” எனக் குற்றம்சாட்டினார்.


மேலும், “சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி மக்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. நான் மேயராக இருந்தபோது கொண்டு வந்த நான்காவது குடிநீர் திட்டத்தை இன்று திமுக அரசு தங்களுடைய சாதனையாக கூறிக்கொள்கிறது. பாதாள சாக்கடை திட்டத்திலும் ஊழல் நடைபெறுகிறது,” என அவர் தெரிவித்தார்.


“பெண்களுக்கு பாதுகாப்பான அரசு என்று திமுக தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறது. ஆனால் உண்மையில் திமுக ஆட்சியில் தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதான் அவர்களின் சாதனை என்றால் அந்த அரசு வெட்கப்பட வேண்டும்,” என அவர் ஆவேசமாக பேசினார்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், மகளிரணி மாநில பொதுச் செயலாளர் தேன்மொழி, தெற்கு மகளிரணி மாவட்ட தலைவி வெள்ளத்தாய், வடக்கு மாவட்ட தலைவி ஜமுனா, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பாஜக அணி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.