தமிழக துறவியர் பேரவை, அய்கஃப் கல்லூரி மாணவர் இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்கள் இணைந்து குமரி முதல் சென்னை வரை நடைபெறும் மாபெரும் பசுமைப் பயண மிதிவண்டி பேரணி நிகழ்வு தூத்துக்குடியில் நடைபெற்றது.

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் முன்பு நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் தலைமையேற்று கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணியின் நோக்கம் குறித்து தமிழக துறவியர் பேரவையின் தலைவர் அருள்சகோதரி மரிய பிலோமி உரையாற்றினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மறைமாவட்ட துறவியர் பேரவையின் பொருளாளர் அருள்சகோதரர் அன்பு சுற்றுச்சூழல் சாக்கு வாசித்தார். பின்னர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். வீராங்கனை அமைப்பின் பேராசிரியை பாத்திமா பாபு நிறைவுரை நிகழ்த்தினார்.

புனித தோமையார் பள்ளி மாணவர்கள் இசை வாத்தியம் முழங்க பேரணியினரை வரவேற்றனர். அருள்திரு ஜெயந்தனின் வழிகாட்டுதலில் புனித தோமையார் கல்வியியல் கல்லூரி மாணவிகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர். மிதிவண்டி வீரர்கள் “மரங்களை வெட்டாதீர்” என்ற கருத்தை முன்வைத்து வீதி நாடகத்தை அரங்கேற்றினர். அது பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

பனிமய மாதா கோவில் முன்பிருந்து தொடங்கிய பேரணி ஜார்ஜ் சாலை, தெற்கு காட்டன் சாலை, மேற்கு காட்டன் சாலை, கடற்கரைச் சாலை, மரியன்னை கல்லூரி, பூபாலராயர் புரம், இஞ்ஞாசியார் புரம் மற்றும் மாப்பிள்ளையூரணி வழியாக சாத்தூரை நோக்கிப் புறப்பட்டது.

பசுமைப் பயணத்தில் தூய மரியன்னை கல்லூரி, அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி, புதுக்கிராமம் திருச்சிலுவை மனையியல் கல்லூரி, புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கலந்து கொண்டனர். சாலையோரம் பள்ளி மாணவ, மாணவியர் பச்சை நிறக் கொடியை அசைத்து வரவேற்றனர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் முத்துநகர் கடற்கரையை சுத்தப்படுத்தினர். மேலும் 1500 விதைப் பந்துகள், 1000 மஞ்சள் பைகள், 500 மரக்கன்றுகள், 500 விதை பாக்கெட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

செயின்ட் தாமஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் சுற்றுச்சூழல் குறித்த பாடல்களைப் பாடினர். மிதிவண்டி வீரர்களிடம் தூத்துக்குடியின் சுற்றுச்சூழலை மேம்படுத்த கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த மனு, பேரணியின் நிறைவு நாளில் சென்னையில் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளையோர் இயக்கத்தினர், அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபையினர், வின்செந்தியன்கள், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தினர், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மறைமாவட்டப் பணிக்குழுக்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், வணிகர், மற்றும் பல்வேறு பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரணி சென்ற பாதைகளில் எங்கும் பச்சை நிறக் கொடி பறந்தது.

முன்னதாக தூத்துக்குடி மாவட்ட துறவியர் பேரவைத் தலைவரும் புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி அதிபருமான அருள்திரு மரிய சிங்கராயர் சே.ச. வரவேற்புரை வழங்கினார். துறவியர் பேரவையின் துணைத் தலைவரும் தூய மரியன்னை கல்லூரி முதல்வருமான அருள்சகோதரி ஜெஸ்ஸி நன்றியுரை கூறினார். நிகழ்வை தமிழ்ச் செம்மல் நெய்தல் அண்டோ தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி மறைமாவட்ட துறவியர் பேரவை, தோழமை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.