தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டம் அரசியல் சூடுபிடித்த நிலையில் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு தீவிரமாக உரையாற்றினார்.


அவர் பேசுகையில், “தூத்துக்குடியில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது மக்களுக்கு உதவி செய்ய யார் களத்தில் இருந்தார்கள், யார் இல்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். 15 நாட்களுக்கு மேலாக என் வீட்டில் உணவு தயாரித்து, டிராக்டர் மூலம் வெள்ளப்பகுதிகளுக்கு அனுப்பி வைத்தோம்” என்று தெரிவித்தார்.


தற்போதைய ஆட்சியினரையும் அவர் கடுமையாக விமர்சித்தார். “இரண்டு முறை அமைச்சர், எம்எல்ஏவாக இருந்தும் மக்கள் நலனுக்காக என்ன சாதனை செய்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பிய அவர், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை குறிவைத்து, தீர்வை உயர்த்தி மக்களை ஏமாற்றியுள்ளதாகவும், மேயர் நிர்வாகம் மோசமாக செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.


நகரில் சாலை பணிகளில் முறைகேடு நடைபெறுகிறது என கூறிய அவர், “சிமெண்டு சாலையை உடைத்து மீண்டும் தார் சாலை போடுவது போன்ற செயல்கள் மூலம் டெண்டர்கள் திரும்பத் திரும்ப போடப்பட்டு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது” என்றார்.


மழை வெள்ள காலத்தில் மக்களை சந்திக்காதவர்கள் தற்போது விமர்சனம் செய்வது பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அரசியல் வரலாற்றை நினைவூட்டிய அவர், முன்னாள் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிட்டு, தற்போதைய ஆட்சியை மறைமுகமாக விமர்சித்தார்.


தூத்துக்குடி முத்துநகர் பீச் அமைப்பில் தன் பங்களிப்பு இருப்பதாகவும், அதற்கான கல்வெட்டு சாட்சியமாக இருப்பதாகவும் கூறிய அவர், தற்போது அதன் பெயரை மாற்றி வேறு விதமாக காட்சிப்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.


மேலும், கோவில் சொத்துகள் மற்றும் அரசு நிலங்கள் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற முயற்சிகள் நடந்ததாகவும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “தூத்துக்குடி மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன், புற்றுநோய் சிகிச்சைக்கான தனி கட்டிடம் ஆகியவை என் காலத்தில் கொண்டு வரப்பட்டவை” என்றும் அவர் கூறினார்.


இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியினர், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தூத்துக்குடி தொகுதியில் அரசியல் வாதங்கள் தீவிரமடைந்து வருகின்றன.