தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி அரசு துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், “நல்லாசிரியர்” என்ற பட்டத்திற்கு பொருத்தமான முன்னுதாரணமாக விளங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு, தங்கள் பள்ளி மேல் பறக்கும் விமானத்தை நோக்கி “நாம் ஒருநாள் அதில் ஏற முடியுமா?” என்று ஆர்வமாக கேட்ட சிறுவர் கேள்வியை கனவாக அல்ல, நனவாக மாற்றியவர் இவர். தனது சொந்தச் செலவில் 18 மாணவர்களை சென்னைக்கு விமானப் பயணத்தில் அழைத்துச் சென்றார்.

இந்த ஆண்டும், பழைய மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று — “நாங்களும் உங்கள் மாணவர்தானே!” என்று கேட்ட 8 பழைய மாணவர்களும், 10 தற்போதைய மாணவர்களும் இணைந்து மொத்தம் 18 மாணவர்களை மீண்டும் விமானப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

வரும் நவம்பர் 8ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. இளம்பகவத் சிறப்புரை ஆற்றி மாணவர்களை வழியனுப்பவுள்ளார்.
அதேநேரம், முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலர் தெட்சணாமூர்த்தி, ஊரக வட்டார கல்வி அலுவலர் மரிய ஜெயசீலா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மாணவர்கள் விமானத்தில் ஏறியவுடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தன்னுடைய “நீர்மம்” நாவலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். சென்னை சென்றடைந்த மாணவர்களை சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார் மற்றும் செயலாளர் சங்கர் மணி வரவேற்கின்றனர்.

மெட்ரோ ரயிலில் நந்தனத்திற்கு சென்ற மாணவர்கள் முதலில் அண்ணா நூலகத்தை பார்வையிட்டு, ஊடகவியலாளர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் உரையை கேட்கிறார்கள். பின்னர் கோளரங்கம், சென்னை இந்துஸ்தான் கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் கா. அபிஷ்விக்னேஷ் உடன் உரையாடல், தலைமை செயலகம், மெரீனா பீச்சில் தலைவர்களின் சமாதிகள் ஆகியவற்றையும் பார்வையிடுகிறார்கள்.

பின்னர் சென்னை சிப்காட் அலுவலக இயக்குனர் கி. செந்தில் ராஜ் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை நேரத்தில் கன்னிமாரா நூலகம் மற்றும் அதில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர் பொருட்களை காண்கிறார்கள். அங்கு காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி மற்றும் தோரணமலை முருகன்கோயில் அறங்காவலர் செண்பகராமன் மாணவர்களிடம் உரையாற்றுகிறார்கள்.

அனைத்துப் பயண நிகழ்வுகளும் முடிந்து மாலை நேரத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மூலம் மாணவர்கள் தூத்துக்குடி திரும்புகிறார்கள். இந்த விமானப் பயணத்தை மாணவர்களுக்காக தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிற நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அவர்களை கிராம மக்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பாராட்டி வருகின்றன.
கொரோனா காலத்தில் தனது சம்பளத்திலிருந்து தொகை ஒன்றை பயன்படுத்தி பள்ளிக்காக புதிய கட்டிடத்தையும் கட்டி அளித்திருப்பது இவரின் மனிதநேய பணியின் மற்றொரு சிறப்பாகும்.