தூத்துக்குடி அய்யனடைப்பு, கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள பிரத்தியங்கிராதேவி–காலபைரவர் சித்தர் பீடத்தில், ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மகாயாகம் நடைபெற்றது.
விழாவையொட்டி காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து ராசிக்காரர்களின் நலனுக்காக மகாயாகம் நடத்தப்பட்டது. பிரத்தியங்கிராதேவி–காலபைரவர் சித்தர் பீட தலைவர் சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படவும், உலக அமைதி மற்றும் உலக சமாதானம் நிலவவும், நல்ல மழை பெய்யவும், மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாகவும் வளமுடனும் வாழவும் பக்தர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மௌனப் பிரார்த்தனை மேற்கொண்டனர்.
வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரத்தியங்கிராதேவி – காலபைரவர் சித்தர் பீட தலைவர் சீனிவாச சித்தர் செய்திருந்தார்.