Breaking News

தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ஊழலற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்க வேண்டும் – பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்ராங்கதன்!!

  • Share on

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையை பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வரவேற்றுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, அரசுத் துறைகளில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் ஊழல் குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


குறிப்பாக, கைப்பற்றப்பட்ட தொகையில் தூத்துக்குடி மாநகராட்சி முதலிடத்தில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், மாநகராட்சியில் பொதுமக்கள் எந்தவொரு நிர்வாக சேவையையும் பெறச் சென்றாலும் லஞ்சம் கொடுக்காமல் பணிகள் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு டெண்டர் முறைகேடுகள் குறித்து பா.ஜ.க. சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களை அலைக்கழிக்கும் நிர்வாக அலட்சியம், அடிப்படை வசதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் பல்வேறு சீர்கேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டுள்ள சோதனை வரவேற்கத்தக்க நடவடிக்கை என சித்ராங்கதன் கூறியுள்ளார்.


இந்த சோதனையின் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வந்ததாகக் கூறப்படும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து திடீர் சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு மக்கள் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகத்தை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்ராங்கதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


  • Share on

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: தமிழக அரசின் நடவடிக்கைக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் வரவேற்பு!!

உலக நன்மை வேண்டி ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹாயாகம்: ஸ்ரீசித்தர் பீடத்தில் பக்தர்கள் திரளான பங்கேற்பு!!

  • Share on

Trending News