ஸ்ரீசித்தர் பீடத்தில் உள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹாயாகம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உலகில் அன்பும் அமைதியும் நிலவவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் செழித்து வளரவும், பக்தர்களின் வாழ்க்கையில் செல்வ வளம் பெருகவும் வேண்டி சிறப்பு மஹாயாக வழிபாடுகள் காலை முதல் மாலை வரை வெகுசிறப்பாக நடைபெற்றன.
இதையொட்டி ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் ஆலய வழிபாட்டுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.