தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட தாளமுத்துநகர் சேகரம், தூய இம்மானுவேல் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய ஆராதனைக்குப் பிறகு சபை மக்கள் திரளாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலயத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டு, சேகர நிர்வாகம் மற்றும் குருவானவருக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 09.11.2025 அன்று நடைபெற்ற சேகர மன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலர் தேர்தல் முடிவை ஏற்காமல், மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் செயல்படுவதை தடுக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், தேர்தலுக்கு முன்பு 13 மாதங்கள் நிர்வாகத்தில் இருந்தவர்கள் சபை மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட காணிக்கை, பண்டிகை வரி, ஆசன நன்கொடை மற்றும் ஆண்டு சந்தா உள்ளிட்ட தொகைகளுக்கான முழுமையான வரவு-செலவு கணக்குகளை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றும், வசூலிக்கப்பட்ட பணத்தில் மீதமுள்ள தொகை சேகர வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சேகர அலுவலகத்தில் 2012-ம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வந்த முக்கிய ஆவணங்கள், வரவு-செலவு பதிவேடுகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டு, தற்போதைய நிர்வாகிகள் மீது களவு குற்றச்சாட்டு சுமத்த முயற்சி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஹார்ட்டிஸ்க் மற்றும் பதிவு சாதனங்களும் சேதப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
தற்போது மார்ச் மாதம் முதல் பொறுப்பேற்றுள்ள குருவானவர் காலேப் மேன்சிங் மற்றும் தற்போதைய நிர்வாகம் மேற்கண்ட விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதால், அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சபையின் ஒற்றுமையையும், ஆலயத்தின் நற்பெயரையும் பாதுகாக்கும் வகையில் உண்மையான நிலைமையை விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சபை மக்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.