தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான வயது வாரியான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் “விளையும் பயிர்” என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன.
மாவட்டம் முழுவதும் 6 மையங்களில் வட்டார அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகள் தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமையிலும், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையிலும் நடைபெற்றன. மாவட்ட கல்வி அலுவலர் முனியசாமி மற்றும் செயின்ட் மேரிஸ் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஷிபானா ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
11, 12 மற்றும் 13 வயது பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக 60 மீட்டர் ஓட்டம், 600 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி கூறுகையில், “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப மாணவர்களின் உடற்திறன் மற்றும் விளையாட்டுத் திறமைகளை சிறுவயதிலேயே கண்டறிந்து, எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
மேலும், போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு தொடர் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு, அவர்களது திறன் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் சிறப்பு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் வேல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இளம் வயதிலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது திறமைகளை வெளிப்படுத்துவதோடு, ஒழுக்கமான மற்றும் வெற்றிகரமான எதிர்கால வாழ்க்கையை உருவாக்கவும் உதவும் என அவர் மாணவர்களை ஊக்குவித்தார்.
போட்டிகளுக்கான நடுவர்களாக மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றினர். இந்த மாவட்ட அளவிலான தடகளப் போட்டி மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை கண்டறிந்து வளர்க்கும் முக்கிய முயற்சியாக அமைந்தது.