தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகத்தில் இன்று (31.01.2026 – சனிக்கிழமை) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் முன்னாள் மேலாளரும், ‘புலி’ படத்தின் தயாரிப்பாளருமான பி.டி. செல்வகுமார் பல்வேறு அரசியல், சினிமா மற்றும் சமூகக் கருத்துகளை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.


செய்தியாளர்களை சந்தித்த பின்னர், எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், சபா நாயகர் தலைமையில் தனக்கு பாராட்டு விழா நடைபெற்றதாகவும், இதுவரை 25 கலையரங்கங்கள் கட்டி வழங்கியுள்ளேன், மேலும் வெளிவர முடியாமல் இருந்த திரைப்படங்களை வெளியிட உதவி செய்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.


சில தரமான திரைப்படங்களுக்கு தமிழக அரசு விருது வழங்க இருப்பதை மனதார வரவேற்பதாக கூறிய அவர், “நான் ஒரு கலைஞன் என்ற முறையில் இதனை மனமார வாழ்த்துகிறேன்” என்றார். மேலும், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பெண்களுக்கு பால் குடம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவித்தார்.


நடிகர் விஜய் குறித்து பேசுகையில், “நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர், மகனை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் மகனாகி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தந்தையையே விட்டு விட்டார்” என விமர்சனம் செய்தார்.


“ஜனநாயகன் திரைப்படம் வெளிவராததற்கு முதலில் படக்குழுவினரே சென்சார் தொடர்பான தவறுகளை சரி செய்திருக்க வேண்டும். இதற்கு தமிழக அரசுக்கும், பாஜக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படம் வெளியாகாததற்கான முழுப் பொறுப்பும் விஜயையே சாரும்” என தெளிவுபடுத்தினார்.


தனது அனுபவங்களை பகிர்ந்த அவர், “ரஜினிகாந்த் முதல் பல நடிகர்களுடன் பயணம் செய்துள்ளேன். ஆனால் விஜயுடன் மேலாளராக இருந்த காலம் எனக்கு மன அழுத்தத்தை மட்டுமே கொடுத்தது” என கூறினார். இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய செல்வகுமார், “நடிகர்களின் பின்னால் இளைஞர்கள் செல்லக் கூடாது” என்பதே தனது நிலைப்பாடு என தெரிவித்தார்.


வரவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர்,
“வருகின்ற தேர்தல் முடிவு கண்டிப்பாக பாதகமாகவே அமையும். நல்லவர்களை அருகில் வைத்துக் கொள்ள தவறிய விஜய், இந்த தேர்தலில் தோல்வியை சந்திப்பார். இது சினிமா அல்ல… சட்டமன்றத் தேர்தலில் விசில் சத்தம் கேட்கப் போவதில்லை” எனக் கடுமையாக விமர்சித்தார்.