தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சுற்றிய அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. தனியார் செய்தி தொலைக்காட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “யாருக்கு வாய்ப்பு – தூத்துக்குடி சட்டமன்றம்?” என்ற கேள்வி வைரலாகி, தற்போது தொகுதி மக்களிடையே பரவலான பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த செய்தியில் ஒவ்வொரு முக்கியக் கட்சியிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளவர்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுகவின் வாய்ப்புகள் குறித்து அதிக கவனம் திரும்பியுள்ளது.
திமுகவில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
திமுக சார்பில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதே நேரத்தில், தற்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயராக செயல்பட்டு வரும் ஜெகன் பெரியசாமி – அமைச்சரின் சகோதரர் என்பதையும் தாண்டி, தனித்த அரசியல் அடையாளம் உருவாக்கியவர் என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மாநகராட்சியில் மேற்கொண்ட திட்டங்கள், பொதுமக்களுடன் நேரடி தொடர்பு, திடீர் ஆய்வுகள், விரைவு நடவடிக்கைகள் ஆகியவை அவரை சட்டமன்றத்துக்கான “வலுவான முகம்” என மாற்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
“நகராட்சி நிர்வாகத்தில் சாதித்தவர் – சட்டமன்றத்திலும் சாதிப்பார்” என்ற வாசகம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் திமுகவின் உள்கட்சிச் சூழலிலும், பொதுமக்கள் மத்திலும் மேயர் ஜெகன் பெரியசாமியின் பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகிறது.
அதிமுகவில் பலர் ரேஸில்
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு சங்க தலைவரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதனின் ஆதரவாளருமான ஆர். சுதாகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ஆண்ட்ரூ மணி ஆகியோரில் யாருக்காவது வாய்ப்பு இருக்கலாம் என அவர்களது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாஜக – காங்கிரஸ் தரப்பிலும் பரபரப்பு
பாஜக சார்பில் முன்னாள் ராஜ்யசபா எம்பியும் தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருபவருமான சசிகலா புஷ்பா, மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆகியோரின் பெயர்களும் பேசப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினரும் மாநகர மாவட்ட தலைவருமான சகாயராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், கிழக்கு மண்டல தலைவர் ஐய்சன் சில்வா ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் – நாம் தமிழர்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ், மாநில துணை செயலாளர் சுபத்ராவின் கணவர் ஜே.கே.ஆர். முருகன், மேலும் களப்பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் அஜிதா ஆக்னல் ஆகியோரின் பெயர்களும் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.
நாம் தமிழர் கட்சி சார்பில் ஜேக்கப் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.