தமிழ்நாடு தலைகுனியாது பொதுகூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன், கழக தோழர்களை நோக்கி ஆவேசமும் உற்சாகமும் நிறைந்த உரையாற்றினார்.
“கழக தோழர்களின் பணி என்பது இன்று சாதாரண பிரச்சாரம் அல்ல. நாம் ஒரு அரசியல் போருக்கு தயாராக இருக்கிறோம். அதற்காக வீடுதோறும் சென்று நம் சகோதர, சகோதரிகளிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். பொதுமக்களின் வாக்குகளை திமுக அரசுக்கு சாதகமாக மாற்றுவது மிக முக்கியமான பணியாக உள்ளதாகக் கூறிய அவர், “மதில் மேல் பூனை போல் இங்கேயா, அங்கேயா என்று நிற்கும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். எது உண்மை, எது பொய் என்று அறியாதவர்களை நம் அரசின் சாதனைகள் மூலமாக தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
திமுக பிரச்சாரத்தின் காலமாற்றத்தை சுட்டிக்காட்டிய கீதா ஜீவன், “ஒரு காலத்தில் நம் தலைவர் கலைஞரின் பேச்சே மிகப்பெரிய பிரச்சாரமாக இருந்தது. அதன் பின்னர் ரேடியோ, பத்திரிகை, டிவி என வளர்ச்சி கண்டது. இன்றைக்கு அந்த இடத்தை AI தொழில்நுட்பம் பிடித்துள்ளது” என குறிப்பிட்டார். இதனால் கழக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் மேலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, திமுக அரசின் சாதனைகளை எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“நம் கழக தோழர்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேசினாலும், அந்த இடமே ஒரு மேடையாக மாற வேண்டும். அந்த மேடையில் திமுக அரசின் சாதனைகள் ஒலிக்க வேண்டும்” என்று அவர் கூறினார். அமைச்சர் கீதா ஜீவனின் இந்த உரை தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.