தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உடன் இணைந்து செயல்படும் சமூக மேம்பாட்டு திட்டம் – டச் (TOUCH), உன்னத் பாரத் அபியான் மற்றும் முதுநிலை, ஆராய்ச்சி ஆங்கிலத் துறை இணைந்து 26.02.2026 அன்று பிற்பகல் 1.30 மணி முதல் 4.00 மணி வரை தருவைகுளம் புனித மைக்கேல் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் சிறுதானிய உணவுப் பொருட்கள் குறித்த செய்முறைப் பயிற்சியை நடத்தியது.


சிறுதானிய உணவுப் பொருட்கள் தொழில் முனைவோரான மு. தன்வீர் ஷஹானா வளநபராக கலந்து கொண்டு, சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பை விளக்கி, பல்வேறு சிறுதானிய உணவுகளை தயாரிக்கும் முறைகளை செய்முறையாகக் கற்றுக் கொடுத்தார். இப்பயிற்சி பெண்களுக்கு தொழில் முனைவு திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் அமைந்தது.


முனைவர் மரியா சகாய ஷர்மிளா மேற்கொண்ட “சிறுதானிய உணவுப் பொருட்கள் உற்பத்தியில் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்குதல்” என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் தன்னிறைவு அடைய சிறுதானிய உற்பத்தி ஒரு பயனுள்ள வழியாக அமைய முடியும் என்பதை இப்பயிற்சி வலியுறுத்தியது.


இந்நிகழ்ச்சியை ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் பி. செரீனா மார்கரெட் ஒருங்கிணைத்தார். சமூக மேம்பாட்டு திட்டப் பொறுப்பாளர்களான ம. கெர்மினா மற்றும் ஜெ. மெல்பா ஷாரோன் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பெண்களுக்கு பயனுள்ள அறிவையும் தொழில் முனைவு ஊக்கத்தையும் வழங்கிய இப்பயிற்சி நிகழ்வு சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது.