தூத்துக்குடி நாசரேத்து திருமண்டலம் தென்னிந்திய நாசரேத் சட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கணக்கு பரிசோதனை விதிமுறைக்கு எதிராக செயல்பட்டதாக டிஎஸ்எப் அணியினர் குற்றம் சாட்டினர். ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதி மணி அவர்களின் முன்னிலையில் கணக்கு பரிசோதனை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், திருமண்டலத்தின் மூலச் சட்டத்திற்கு முரணாக தேர்தல் நடைபெற்றதாகவும் முன்னாள் குருத்துவர் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

திருமண்டலத்தில் தகுதிகளின் அடிப்படையில் ஞானஸ்தானம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைமையில் பல தகுதிகள் பின்பற்றப்படாமையே பிரச்சினைக்கு காரணம் எனவும் அவர் கூறினார். இதனை நீதிபதி ஜோதி மணியிடம் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், ஆசிரியர் நியமனத்தில் பணம் வாங்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், வங்கிக் கணக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். 30 குருமார்களை நியமிக்க முயற்சி செய்தபோதும், அதற்கு எஸ்டிகே ராஜன் அணியினரே தடை செய்ததாக குற்றம் சாட்டினார்.

20 ஆண்டுகளாக வளர்ச்சி நோக்கில் செயல்பட்டு வரும் டிஎஸ்எப் அணி எந்த குற்றச்சாட்டிலும் இடம் பெறவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கூறிய அவர், சமீபத்திய தேர்தல் முறையாக நடைபெறாததற்கும் எஸ்டிகே ராஜன் அணியினரின் இடையூறுகளே காரணம் எனவும் குறிப்பிட்டார்.

“நாங்கள் பொறுப்பில் இருந்தபோது புதிய கட்டிடப் பணிக்கு 75% நிதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 25% மட்டும் வழங்க வேண்டியிருந்தது. ஆனால் எஸ்டிகே ராஜன் அணி பொறுப்பில் இருந்த காலத்தில் பல ஆவணங்களை தீயிட்டு எரித்தும், பல குளறுபடிகளில் ஈடுபட்டும் இருந்தது,” என்று இம்மானுவேல் வான்ஸ்றக் கடுமையாக விமர்சித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சம்பளம் பெறாமல் இருந்த ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சந்தித்து குறைகளை எடுத்துக்கூறி, மீண்டும் சம்பளம் பெற்றுத் தந்தது தங்கள் அணியின் முயற்சியாலேயே சாத்தியமானது என்றும் தெரிவித்தார். பல பள்ளிகளை சிபிஎஸ்இ தரத்தில் உயர்த்தியதும் தங்கள் நிர்வாகத்தின் சாதனைகளில் ஒன்றாக அவர் வலியுறுத்தினார்.

“டிஎஸ்எப் அணி கடந்த முறை 3–4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றலாம். மக்கள் நம்பிக்கை எங்கள்மீது உள்ளது. வரும் டிசம்பர் மாத தேர்தலில் குறைந்தது 10 வாக்குகளுக்கு மேல் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்,” என அவர் உறுதியாக தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்ஸனும் கலந்து கொண்டு பல விபரங்களை பகிர்ந்தார்.