சமூக செயல்பாட்டாளரும் மூத்த பத்திரிகையாளருமான தோழர் டி.எஸ்.எஸ். மணி சில தினங்களுக்கு முன்பு அய்யனார்புரம் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அரசு மேய்ச்சல் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை அறிந்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் துணை முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், கோரிக்கை மனு ஒன்றையும் தபால் மூலம் துணை முதல்வருக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழரசடி பஞ்சாயத்தில் அய்யனார்புரம், துப்பாசிப்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் தரை என்று வகைப்படுத்தப்பட்ட நிலம் அனாதீனம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலம் புஞ்சை தரிசு நிலம் போன்று சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் சிலர் தனியார் தொழிலதிபர்கள் ஆக்கிரமிப்பு செய்து மேய்ச்சல் தரை நிலத்தை உப்பளமாக மாற்றி அந்த நிலத்தை பாழ்படுத்தி வருகிறார்கள்.

எந்த நோக்கத்திற்காக அரசு இந்த இடத்தை ஒதுக்கியதோ அந்த நோக்கத்திற்கு மாறாக தனியார் தொழிலதிபர்கள் மற்றும் சுமார் 20 ஆக்கிரீப்பாளர்கள் கடந்த பல ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்து மோசடியாக பத்திரப்பதிவு செய்து அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் இடத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இதில் தொழிலதிபர் சர்வே நம்பர் 127 சர்வே நம்பர் 224 மற்றும் அரசு ரயத்துவாரி இடமான சர்வே நம்பர் 218/1 இந்திய உப்பு  இலகாவிற்கு சொந்தமான இடத்தை 1989 ல் கட்டுக்குத்தகைக்கு எடுக்கப்பட்ட இடம் பின்பு மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் உள்ள தொழிலதிபர் இவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சர்வே எண் 209 ல் மட்டும் சுமார் 80 ஏக்கர் அரசுக்கு சொந்தமான ராயத்து வாரி  புஞ்சையை பட்டா போட்டு வைத்திருக்கிறார்.

சர்வே நம்பர் 227 ல் சுமார் 20 ஏக்கர் இடத்தை தன்னுடைய மகன் பெயரில் பட்டா போட்டு வைத்திருக்கிறார். 1971 ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டம் அமலில் இருக்கும் காலத்தில் சுமார் 500 ஏக்கர் இடத்தை இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் பேரில் பட்டா பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவை அனைத்து இடமும் ரயத்துவாரி புஞ்சை இடமாகும் ரயத்துவாரி புஞ்சை இடத்தில் ஒரு மனிதருக்கு இரண்டு ஏக்கர் இடம் மட்டும் தான் அரசால் கொடுக்க முடியும் ஆனால் இவர்கள் குடும்ப உறுப்பினர் பேரில் சர்வே நம்பர் 213 ல் உள்ள சுமார் 39 ஏக்கர் இடம் அரசு ராயத்துவாரி இடம் இவர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் பட்டா பெற்ற காலம் அனைத்தும் நில உற்சவரம்பு சட்டம் அமலில் இருந்த காலமாகும். எனவே இவர்கள் அரசை ஏமாற்றி அரசை பல்வேறு மோசடி செய்து இவர்கள் குடும்ப உறுப்பினர்கள் பட்டா போட்டு இருக்கிறார்கள். எனவே இவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பட்டாக்கள் அனைத்தையும் தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் விரிவாக விசாரணை செய்து இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அல்லது இவர்கள் மீது நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும் மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் தொடர்ந்து போராடும் என்று மாநில தலைவர் சாமு. காந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.