தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகள் தரமாகவும், திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவடையவும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
மாநகராட்சியின் 60-வது வார்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மேயர், இம்முறை 1-ம் கேட் அருகே உள்ள காந்தி சிலை, கொடிமரத் தெரு, சத்திரம் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: "மக்கள் பிரதிநிதிகள் செயல்படுத்தும் திட்டங்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களும் பயனடையும் வகையில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்கேற்ப திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. பணிகள் நடைபெறும் இடங்களை நேரில் ஆய்வு செய்து, தரக்குறைவு அல்லது தவறுகள் ஏற்படாத வகையில் ஒப்பந்ததாரர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது பொதுமக்கள் தங்களது தேவைகளையும், திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் முன்வைக்கின்றனர். அவற்றையும் கவனத்தில் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களுக்கான அனைத்து திட்டங்களும் தரமாகவும் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்," என்றார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் ரவீந்திரன், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மூர்த்தி, போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.