தூத்துக்குடி தனசேகர் நகரில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை மற்றும் அதனுடன் இணைந்துள்ள பார் காரணமாக அப்பகுதியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



குறிப்பாக மது அருந்திவிட்டு வெளியே வரும் சிலர் சாலையோரங்களில் படுத்து உறங்குவது, பொதுவெளியில் வாந்தி எடுப்பது, அநாகரிகமாக நடந்து கொள்வது, பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அச்சத்துடன் அப்பகுதியில் நடமாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், பெண் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் மாலை நேரங்களில் டியூஷனுக்கு செல்லவும், பெண்கள் தனியாக வெளியே வரவும் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலை குறித்து பலமுறை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இதனால், அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவர் திரு. சகாயராஜ் மற்றும் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் திரு. பெருமாள்சாமி ஆகியோர், பொதுமக்களின் நலனே காங்கிரஸ் கட்சியின் முதன்மை நோக்கம் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.



மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொதுமக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தலைமையில் விரைவில் மிகப்பெரிய கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.