தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாட்டு வசதிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இரண்டு முக்கிய கட்டிட வசதிகள் இன்று (21.11.2025) அரசுமுறை விழாவில் திறந்து வைக்கப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளமும், புதிதாக அமைக்கப்பட்ட ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கமும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட இளம் விளையாட்டு வீரர்களுக்கு நவீனமான பயிற்சி வசதிகள் உருவாகியுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளம் – மேம்பட்ட தரத்தில் திறப்பு :-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், TMB அறக்கட்டளையும் இணைந்து மேற்கொண்ட நிதி உதவியுடன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல் குளம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. இது தொடர்பான திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் (இ.ஆ.ப.) தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் நீச்சல் குளத்தை திறந்து வைத்தார்..

அமைச்சர் பி.கீதாஜீவன், மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா (இ.ஆ.ப.), TMB அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சாலி எஸ். நாயர், தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் எம். முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ந.ஆ. ஜெயரத்தின ராஜன் ஒருங்கிணைத்தார்.

புதிய ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கம் – தூத்துக்குடிக்கு முதல் வசதி :-

என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் 2025–2026 ஆம் ஆண்டிற்காக ரூ. 65.24 லட்சம் செலவில் உருவாக்கிய ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கமும் இன்று திறக்கப்பட்டது. தருவை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அரங்கத்தை, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விழாவில் எம்பி கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.

அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, என்எல்சி முதன்மை செயல் அதிகாரி அனந்த ராமானுஜம், விளையாட்டு அலுவலர் ஜெயரத்தின ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி விளையாட்டு துறைக்கு புதிய உயரம் :-

நீச்சல் குளம் மேம்படுத்தப்பட்டதும், ஸ்குவாஷ் அரங்கம் புதிதாக உருவாக்கப்பட்டதும் தூத்துக்குடி மாவட்டத்தின் விளையாட்டு துறையில் ஒரு புதிய மைல்கல்லாகும். இளம் வீரர்கள் தேசிய மற்றும் மாநில மட்ட போட்டிகளுக்கு தயாராக, இலக்கியமான மற்றும் தரமான பயிற்சி வசதிகளை பெறும் சூழல் உருவாகியுள்ளது.

விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் இரண்டு முக்கிய கட்டிடத்திட்டங்களின் திறப்பு விழா, தூத்துக்குடி மாவட்ட முன்னேற்றத்தில் ஒரு சிறப்பமான நாளாக அமைந்தது.