எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள், மகளிரணி, இளைஞரணி, தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.



உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும், தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்ட திமுகவினர் அவசரமாக திரண்டு பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.



போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், “சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் பதில் அளிக்க முடியாமல் திணறும் த.வெ.க. அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். இந்தக் கைது நடவடிக்கையை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.



மேலும், த.வெ.க. அரசு தொடர்ந்து ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஒடுக்கி, மக்களின் குரலை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது. ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்,” என்று தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து, திமுகவினர் அரசுக்கு எதிராகவும், காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். பதற்றமான சூழல் நிலவிய நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கைது செய்யப்பட்ட திமுகவினரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சியினர் மத்தியில் வலுத்து வருகிறது.