தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மாதாந்திர மாநகராட்சி கூட்டத்தில், 50வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமார் தனது வார்டு மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து வலியுறுத்தி பேசினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பேசிய கவுன்சிலர் சரவணகுமார், தனது வார்டிற்குட்பட்ட எஸ்.ஆர்.எம். நகர் பகுதிகளில் பல தெருவிளக்குகள் பராமரிப்பு இன்றி செயலிழந்து இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தார். எனவே, பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்து, புதிய விளக்குகள் அமைக்கும் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும், சாந்தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் மிகவும் குறைந்த அழுத்தத்தில் வருவதால் பொதுமக்கள் தினசரி சிரமத்தை சந்தித்து வருவதாகவும், குடிநீர் விநியோகத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, தெருவிளக்கு தொடர்பான பிரச்சினைகள் விரைவில் சரிசெய்யப்படும் என உறுதியளித்தார். மேலும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து வார்டுகளிலும் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பல வார்டுகளில் பணிகள் நிறைவு பெற்று குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், மீதமுள்ள பகுதிகளிலும் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேயர் தெரிவித்தார்.