தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் காட்டுப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியை விரைவாக கைது செய்ய அன்றைய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் காவல்துறையினருக்கு உடனடி உத்தரவு பிறப்பித்ததாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தர்ம முனீஸ்வரன் என்பவரை அடையாளம் கண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், குற்றம் நடைபெற்ற 20 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன், சம்பவம் நடைபெற்ற 77வது நாளிலேயே போக்சோ நீதிமன்றம் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுமி கொலை வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, மிகக் குறுகிய காலத்தில் நீதியும் வழங்கப்பட்டதற்கு திமுக அரசின் துரித நடவடிக்கைகளே காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ள அவர், “ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே மாநிலம் முழுவதும் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தூத்துக்குடி நகரில் நேற்று இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். “பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், இந்த சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? குழந்தைகள் மூலம் வாக்கு சேகரித்தவர்கள், இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?” என்றும் கீதாஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.