தூத்துக்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் பலவும் இதுவரை தீர்வு காணப்படாமல் கிடப்பில் உள்ள நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவற்றை முன்னுரிமையுடன் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக, பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் பிரிவு தலைவர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி நகரில் நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி, பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கன் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதன்படி, தூத்துக்குடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சேவைகள் அனைத்து தரப்பு நோயாளிகளும் முழுமையாக பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் புதர்கள் அதிகளவில் வளர்ந்து விஷப்பாம்புகள் நடமாடுவதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே உடனடியாக புதர்களை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், சி.வி. பள்ளி வளாகத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார். மேலும், விவிடி சிக்னல் பகுதியில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் மேம்பாலம் அமைப்பது மக்கள் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது என்றார்.
நகரின் முக்கிய சாலைகள் மற்றும் வணிகப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தூத்துக்குடி நகர மையத்தில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையம் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், நகர புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், நகரில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், மழைக்காலங்களில் நீர் தேக்கம், பாதாள சாக்கடை பணிகளில் குறைபாடுகள், சேதமடைந்த சாலைகள், தெருவிளக்கு வசதி இல்லாமை, துறைமுகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு, இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானங்களை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சினைகளும் நீண்டகாலமாக நிலவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளர்ச்சிக்கான மிகப்பெரிய வாய்ப்புகள் கொண்ட பகுதி என்பதால், கடல்சார் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், ஐ.டி. பூங்காக்கள் மற்றும் சிறு தொழில் வளாகங்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். புதிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் தொடங்கப்படும் போது, தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மேலும், உள்ளூர் இளைஞர்களின் திறனை மேம்படுத்த தொழில்பயிற்சி மையங்களும் உருவாக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். புதியதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஸ்ரீநாத், மக்கள் நீண்டநாள் எதிர்பார்த்து வரும் இந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்தி தூத்துக்குடி வளர்ச்சிக்கான புதிய மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாக அவர் தெரிவித்தார்.