மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி. கீதா ஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இன்று நடைபெற்ற தொடர் பிரச்சாரத்தின் போது, மத்திய அரசையும், குறிப்பாக அமித்ஷா முன்வைத்த கருத்துகளையும் கடுமையாக விமர்சித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி 24, 25, 26ஆம் வார்டுகளுக்கு உட்பட்ட குரூஸ்புரம், சந்தனமாரி அம்மன் கோவில் தெரு, செயின்ட் மேரிஸ் கல்லூரி பின்புறம், புதுத்தெரு, காளியப்ப பிள்ளை தெரு, வாடித்தெரு, வடக்கு ராஜா தெரு, எஸ்.எஸ். பிள்ளை மார்க்கெட், வடக்கு வாணியன் விளை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், மக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

அப்போது, தமிழக அரசின் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”, “புதுமைப் பெண் திட்டம்”, மற்றும் “விடியல் பயணம்” (இலவச பேருந்து பயணம்) போன்ற திட்டங்கள் பெண்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை எடுத்துரைத்தார். இந்த திட்டங்கள் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுச் சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என கூறியிருப்பதை விமர்சித்த கீதா ஜீவன், “மீண்டும் பழையபடி வேதாளம் முருங்கை மரம் ஏற முயற்சி செய்கிறது போல உள்ளது. மக்களின் உண்மையான பிரச்சினைகளை தவிர்த்து, கவனத்தை திருப்பும் முயற்சிதான் இது” எனக் கூறினார்.

மேலும், உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்ட அவர், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் முன்னேற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.