தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ‘கிரீன் காப்பர்’ என்ற புதிய தொழில்நுட்பத்தின் பெயரில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் செயல் கவுன்சில் வலியுறுத்தியது.


இந்த சந்திப்பில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஈஸ்வரன், மாவட்டத் தலைவர் மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள், வாழ்வாதார அமைப்புகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, “ஆலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்; மாவட்டத்தின் பொருளாதாரம் சரிந்துள்ளது.


குறைந்த மாசு உமிழ்வுடன், நேரடி சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் முழு வெளிப்படைத்தன்மையுடன் ‘கிரீன் காப்பர்’ திட்டத்தின் கீழ் ஆலையை மீண்டும் திறக்கலாம்” என தெரிவித்தனர். மேலும், சட்டப்படி வெளிப்படையான நடைமுறையில் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் முன்வைத்த கருத்துகளை வரவேற்பதாகவும் கூறினர்.


ஆனால், இந்தக் கோரிக்கைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர். 2018-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது 13 பேர் உயிரிழந்த சம்பவம் இன்னும் ஆறாத காயமாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.


“‘கிரீன்’ என்ற பெயர் சூட்டினாலே கடந்த காலத்தின் கரும்புள்ளி அழியாது. உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கேள்விகள் முழுமையாக தீராத நிலையில், ஆலையை மீண்டும் திறப்பது மக்கள் உணர்வுகளை அவமதிப்பதே” என்று அவர்கள் தெரிவித்தனர்.


மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்பு எடுத்த நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள சட்டப் பிரச்சினைகள் ஆகியவற்றை நினைவூட்டிய அவர்கள், “மக்களின் உயிர் பாதுகாப்பை விட எந்த முதலீடும் பெரியதல்ல” என வலியுறுத்தினர். ‘கிரீன் காப்பர்’ விவகாரம் மீண்டும் தூத்துக்குடியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் பழைய காயத்தை மீண்டும் திறக்க முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.