பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் 70ஆவது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. மதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திருவிழா நாட்களில் மக்கள் திரளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குகள், அவசர கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்திற்குப் பிறகு, வீரசக்கதேவி ஆலய விழா குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. மதன் அவர்களுக்கு “பாஞ்சாலங்குறிச்சி போர்கள்” என்ற நூலை மரியாதையாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் வீரசக்கதேவி ஆலய விழா குழு தலைவர் வலசை கண்ணன், வீரசத்தி தேவி ஆலய குழு தலைவர் ஆர். கண்ணன் (குளத்தூர் மாஜி ஜமீன்தார்), செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜ பெருமாள் மற்றும் ஆலய குழுவின் கௌரவத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரவிருக்கும் திருவிழாவை சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.