தூத்துக்குடியில் உள்ள தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுற்றுச்சூழல் மன்றமும், ‘ஈரநிலம்’, ‘ஆதி நிலம்’ அமைப்புகளும் இணைந்து “வனங்கள் – உயிர்களின் உயிர்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தின.
நிகழ்விற்கு கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ் முன்னிலை வகித்தார். முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி பெர்னாண்டோ தலைமை உரையாற்றி, இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என வலியுறுத்தினார்.
சுயநிதிப் பிரிவு இயக்குநர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி மி.சு. எழிலரசி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ‘ஆதி நிலம்’ நிறுவனர் திரு. கு. வீரப்பன் “வனங்களின் வளம்” என்ற தலைப்பில் உரையாற்றி, வனங்கள் மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமென எடுத்துரைத்தார். ‘ஈரநிலம்’ நிறுவனர் ஓவியர் ந. தமிழரசன் நுண்கலையின் நோக்கம் மற்றும் இயற்கை பாதுகாப்பில் கலைக்கான பங்கு குறித்து விளக்கமளித்தார்.
உரை நிகழ்த்திய அனைவரும் இயற்கை, உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். “இயற்கையின்றி வாழ்வில்லை” என்ற உண்மையை மாணவிகளுக்கு தெளிவுபடுத்தியதுடன், இறைவன் அருளிய இயற்கையோடு இணைந்து எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பின்னர் கல்லூரியின் பாத்திமா அரங்கில் ஓவியர் ந. தமிழரசன் வரைந்த இயற்கை மற்றும் உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த கை வண்ண ஓவியங்கள் மாணவிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன.
அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மாணவிகள் இக்காட்சியை கண்டுகளித்து “வனங்கள் – உயிர்களின் உயிர்” என்ற கருத்தை ஆழமாக உணர்ந்தனர். நிகழ்ச்சியை தமிழ்த்துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.