தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டில் அமைந்துள்ள எட்டையாபுரம் ரோடு தொடர்ச்சியில் (பிஎஸ்என்எல் டிரான்ஸ்மிஷன் அலுவலகம் அருகில்) வசித்து வரும் பொதுமக்கள், தங்களது பகுதியில் சாலை மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரக் கோரி மீண்டும் மனு அளித்துள்ளனர்.
இப்பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 50 வயதுக்கு மேற்பட்டோர் 15 பேருக்கு மேல் உள்ளதுடன், பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளும் உள்ளனர். குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்தபின், மணல் சாலை கற்களும் முரடுகளுமாக மேடு பள்ளங்களுடன் காணப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் தெருவின் முனையில் தெருவிளக்கு வசதி இல்லாததால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யவும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. விஷப்பூச்சிகள் போன்றவை இருந்தாலும் இருட்டில் கண்களுக்கு தெரிவதில்லை என்பதால் பாதுகாப்பு குறைபாடு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கோரிக்கையை முன்வைத்து 03.03.2025 அன்று மனு அளிக்கப்பட்டிருந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இன்று தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் 29வது வார்டு பொதுமக்கள் சார்பில் மோகன் மற்றும் காசிலிங்க பெருமாள் மனு அளித்தனர்.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலை அமைப்பதுடன், போதிய தெருவிளக்கு வசதியும் விரைவாக ஏற்படுத்தித் தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.