தூத்துக்குடி லைசன்ஸ்தாரர்கள் உப்பளங்களில் விற்றுமுதல், சுமை தூக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கும் நிகழ்ச்சி, போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கி பேசிய தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, திமுகவில் கலைஞரின் தீவிர பக்தனாக இருந்த தனது தந்தையார், 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தொழிலாளர்களின் நலனுக்காகவும், திமுகவின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபட்டதாக நினைவுகூரினார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் உப்பள அதிபர்களுடன் இணக்கமாக பேசி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத்தந்ததாகவும் கூறினார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு, பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகளின் வேண்டுகோளின்படி அந்தப் பொறுப்பை தானே தொடர்ந்து ஏற்று செய்து வருவதாக தெரிவித்த மேயர், தூத்துக்குடி மாநகரின் அடையாளமும் பிரதான தொழிலுமாக விளங்கும் உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக, சங்கத் தலைவர் என்ற முறையில் தனிப்பட்ட சேமிப்பிலிருந்து சிறு சிறு தொகைகளை போனஸாக வழங்கி வருவதாக கூறினார்.
மேலும், “உங்கள் தலைமுறைக்கு பின்னரும் வரும் குடும்ப உறுப்பினர்கள் திமுகவிற்கும், தளபதியாருக்கும் துணையாக இருக்க வேண்டும். திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இரு கண்களைப் போன்றவை” என உருக்கமாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் செயலாளர் மூர்த்தி, வட்டச்செயலாளர் ரவீந்திரன், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர், உப்பள சங்கத்தை சேர்ந்த கனகராஜ், விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.