ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் (சிவன் கோவில்) இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காலை 3.30 மணிக்கு பள்ளி அறை பூஜை, 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலை 5 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட க்யூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சண்முகம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
வைகுண்டபதி பெருமாள் கோவில்
சிவன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமோத ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு கோ பூஜை நடைபெற்று, அதன் பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது.
இப்பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் பிரதான பட்டர் வைகுண்டராமன் மேற்கொண்டிருந்தார்.
தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவில்
அதேபோல் தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மாரியம்மனுக்கு கணபதி பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கோவில் பூஜைகளை பிரதான பட்டர்கள் சிவா மற்றும் குரு ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.