தூத்துக்குடியில் புத்தாண்டை முன்னிட்டு “புத்தகங்களோடு புத்தாண்டு” என்ற தலைப்பில் சிறப்பான புத்தக வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை புத்தக வாசிப்பு நற்பணி மன்றம், குமிழ்முனை புத்தக வாசிப்பு வண்டி மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் – தூத்துக்குடி மாநகர கிளை ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தலைமை தாங்கி கலந்து கொண்டு, பங்கேற்ற அனைவருக்கும் புத்தகங்களை பரிசாக வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தார். புத்தாண்டை புத்தக வாசிப்புடன் தொடங்குவது சமூகத்தில் அறிவு, சிந்தனை மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை வளர்க்கும் என அவர் உரையாற்றினார்.
மேலும், குமிழ்முனை சைமன், செல்வின், இராதாகிருஷ்ணன் (முன்னாள் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிகழ்ச்சித் தலைவர்) மற்றும் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.
குறிப்பாக, இந்த நிகழ்வில் பங்கேற்ற வாசகர்கள் காலை 6 மணி வரை விடிய விடிய புத்தகங்களை வாசித்து புத்தாண்டை அறிவுத் திருவிழாவாக கொண்டாடியது அனைவரிடமும் பெரும் பாராட்டை பெற்றது.
புத்தாண்டை புத்தகங்களோடு வரவேற்கும் இந்த முயற்சி, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிக்கும் முன்மாதிரி நிகழ்வாக அமைந்தது.