தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சமச்சீரான இழப்பீடு வழங்க வலியுறுத்தி, வரும் ஜனவரி 20ஆம் தேதி சென்னை கோட்டை (தமிழக சட்டசபை) முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம், தூத்துக்குடி அறிவித்துள்ளது.
தமிழக அரசு கடந்த 2008ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையின் அபிவிருத்திக்காக 242 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அந்த நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடாக வழங்கியதாக இயக்கம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு மேலும் 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக, 1984ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையிற்காக சுமார் 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அப்போது ஏக்கர் ஒன்றுக்கு வெறும் 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பின்னர் 2010ஆம் ஆண்டு அந்த 2000 ஏக்கர் நிலத்திற்காக ஏக்கர் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் மிகவும் அநியாயமானதும் வேதனைக்குரியதும் என்னவென்றால், 1984ஆம் ஆண்டு கையகப்படுத்திய நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கிய அரசு, 2008ஆம் ஆண்டு கையகப்படுத்திய நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியது எவ்வாறு நியாயமாகும்? என கேள்வி எழுப்புகிறது ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம்.
மேலும், ஒரே அரசாணையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 2008ஆம் ஆண்டில் 80 ஆயிரம் ரூபாய் என்றும், 2010ஆம் ஆண்டில் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்றும் மாறுபட்ட இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அனைத்து நிலங்களுக்கும் சமச்சீர் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
2008ஆம் ஆண்டு நிலம் வழங்கிய சுமார் 240 குடும்பத்தினர், வழங்கப்பட்ட 80 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை ஏற்றுக்கொள்ளாமல், கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருவதாகவும், பலமுறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுக்கள் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தமிழக அரசுக்கு அவர்களின் கோரிக்கை பரிந்துரை செய்யப்படவில்லை என்றும் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், நடைபெற உள்ள சட்டசபை கூட்டத் தொடரின்போது ஜனவரி 20ஆம் தேதி சென்னை சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாண்புமிகு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், மேலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கத்தின் இந்த நியாயமான போராட்டத்திற்கு, அனைத்து தோழமை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆதரவு வழங்க வேண்டும் என இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.