Breaking News

தமிழர் மரபும், கலைக் களஞ்சியமும் ஒன்றிணையும் மேடை! “3வது தமிழன்டா சங்கமம் 2026” – ஜெகஜீவன் அழைப்பு!!

  • Share on

தமிழரின் பாரம்பரிய கலைகள், மருத்துவ முறைகள், உணவுப்பண்பாடு, நாட்டு நாய்கள், நாட்டுப்புற விளையாட்டுகள் ஆகியவற்றை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் தமிழன்டா இயக்கம், கலைக் குழு சார்பில் நடைபெறும் 3வது தமிழன்டா சங்கமம் 2026 விழா, ஜனவரி 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக் குழு தலைவர் ஜெகஜீவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


தமிழன்டா சங்கமம் 2026 விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே.சின்னத்துரை அண்ட் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்தியா குழுமம், சைன் யோகா பவர், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம், காமராஜ் கல்லூரி, காமராஜ் மகளிர் கல்லூரி, பிளாக் ஃபாரஸ்ட் லீட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி, யோவா அகடாமி, ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி, அரவிந்த் மற்றும் வாசன் கண் மருத்துவமனைகள் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

முதல் நாள் – ஜனவரி 9:
காலை 6 மணிக்கு 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் (மாரத்தான்) நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள், மாணவியர், கல்லூரி ஆண்–பெண் மாணவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். பிற பிரிவுகளில் வெற்றி பெறுவோருக்கு தமிழன்டா விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

காலை 9 மணிக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. காமராஜ் கல்லூரி மற்றும் காமராஜ் மகளிர் கல்லூரி மாணவ–மாணவியர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் இந்த விழாவில் இலவட்டக்கல் தூக்குதல், அம்மியில் தேங்காய் உடைத்தல், உரலில் மாவு அரைத்தல், பம்பரம், கோலிக்கா, கிட்டி கம்பு, நொண்டி விளையாட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. பின்னர் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. மேலும் ஆயிரம் பனை கொட்டைகள் நடும் பசுமை இயக்கமும் நடைபெறுகிறது. இரண்டாம் நாள் – ஜனவரி 10: காலை 7 மணிக்கு தூத்துக்குடி அந்தோணியார் புறம் பனைமரக்காடு பகுதியில் பனை மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது.

முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.5,000, மூன்றாம் பரிசு ரூ.3,000 வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பனை சார்ந்த கண்காட்சி இடம்பெறுகிறது. காலை 10 மணிக்கு காமராஜ் கல்லூரி வளாகத்தில் நாட்டு நாய்கள் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு, மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டிகள், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மூன்றாம் நாள் – ஜனவரி 11:
காலை 7 மணிக்கு நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. காலை 8 மணிக்கு கும்பாவில் பழைய கஞ்சி குடிக்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைக்குழுக்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றன. மாலை 3 மணிக்கு நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு பேரணி, காமராஜ் கல்லூரியிலிருந்து பீங்கான் ஆபீஸ் ரவுண்டானா வரை சென்று மீண்டும் கல்லூரியை அடைகிறது.

மாலையில் தமிழன்டா விருது வழங்கும் விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்று நாட்களும் இயற்கை மருத்துவம், வர்மம், ஓமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இலவச கண் சிகிச்சை முகாம் மூன்று நாட்களும் நடைபெறும். ஜனவரி 11 ஆம் தேதி கண்கண்ணாடி, அறுவை சிகிச்சை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி, யோவா உலக சாதனை ஆய்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜனவரி 11 காலை 8 மணிக்கு 45 நிமிடங்களில் 500 பேர் ஒரே நேரத்தில் கோலம் போட்டு உலக சாதனை நிகழ்வு நடத்தப்படுகிறது.

கோலம் போட தேவையான பொருட்களை போட்டியாளர்கள் தாமே கொண்டு வர வேண்டும்.
அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க முன் அனுமதி அவசியம் என ஜெகஜீவன் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழர் மரபையும், நாட்டுப்புற கலைஞர்களையும் கொண்டாடும் இந்த மூன்று நாள் விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தமிழர் பண்பாட்டை போற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


  • Share on

காட்டுநாயக்கன்பட்டியில் வள்ளலார் அறிவொளி மன்றம் முதலாம் ஆண்டு விழா – சமூக விழிப்புணர்வின் ஒளிச்சுடர்!!

“ஸ்டெர்லைட் நிலங்களுக்கு சமச்சீர் இழப்பீடு கோரி ஜனவரி 20ல் சென்னை சட்டசபை முற்றுகை – ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் அறிவிப்பு”

  • Share on

Trending News