Breaking News

புதிய துறைமுக கடற்கரை பகுதி வளர்ச்சிப் பணிகள் – பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும்: மேயர் ஜெகன் பெரியசாமி!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் புதன்கிழமை தோறும் சுழற்சி முறையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன் மூலம் 15 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர் என்றும், குறிப்பாக பிறப்பு, இறப்பு, முகவரி மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு போன்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

கால்வாய், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட மனுக்கள் முறைப்படுத்தப்பட்டு விரைவாக நிவர்த்தி செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் கூறினார். கிழக்கு மண்டலத்தில் மட்டும் 810 மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 791 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 19 மனுக்களுக்கும் விரைவில் தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்தார்.

ஜனவரி 10ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதன் பின்னர் சாலைகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்றும் மேயர் தெரிவித்தார். கிழக்கு மண்டலத்தில் வார்டு 21 முதல் 28 வரை கழிவுநீர் கால்வாய்கள் திறந்த நிலையில் இருப்பதாகவும், புதியதாக கட்டப்படும் கழிவுநீர் கால்வாய்கள் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு மூடப்பட்ட வடிவில் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியில் இந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும், புதிய துறைமுகத்தில் உள்ள கடற்கரை பகுதியில் மாநகராட்சியும் துறைமுக நிர்வாகமும் இணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்தப் பணிகள் பொங்கலுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். கடற்கரை சாலையில் புதிய நடைப்பயிற்சி மேடை அமைக்கும் பணி 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறைவடைந்துள்ளதாகவும், படகு குளம் முகாமில் புதியதாக படகு விடுவதற்கான வசதிகளும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறினார்.

தெப்பக்குளம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினரும் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், அங்கு உள்ள கல்வெட்டு 147 ஆண்டுகள் பழமையானது என்றும் மேயர் குறிப்பிட்டார். தெப்பக்குளத்தின் பழமை மாறாமல், ஆன்மீக மற்றும் வரலாற்று சிறப்பை பாதுகாக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் வசதிக்காக நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், சாலையோர வியாபாரிகள் 9000 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடற்கரை சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் முதல் மார்க்கெட் வரை உள்ள வி.இ.ரோட்டில் நடைபாதையில் கடைகள் அமைப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை என்றும், அந்த பகுதி பொதுமக்கள் நடந்து செல்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநகரில் 60 அடி, 40 அடி, 20 அடி அகல சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், பழைய தூத்துக்குடி பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் போக்குவரத்து நடைபெறும் வகையில் சாலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் கூறினார். சாலைகளில் வாகனங்களை தவறாக நிறுத்தாமல், குறிப்பிட்ட பார்க்கிங் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், மாநகராட்சிக்கு பொதுமக்கள் எந்நேரமும் புகார் தெரிவிக்கலாம் என்றும், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு வருவதாகவும், நாய்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். பாதாள சாக்கடை திட்டப் பணிகள் பல பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

“எல்லா பகுதிகளிலும் பாரபட்சமின்றி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் மகிழ்ச்சியே எங்களின் மகிழ்ச்சி” என்று மேயர் ஜெகன் பெரியசாமி தனது உரையை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ஒரு பிறப்பு சான்றிதழும், மூன்று முகவரி சான்றிதழ்களும் பயனாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் ஹரிஹரன், நித்தியகல்யாணி, அனுசௌந்தர்யா, தொழில்நுட்ப உதவியாளர்கள் சரண்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், ஆனந்தஜோதி, கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

“குறைதீர்க்கும் முகாமுக்குப் பின் மொட்டை மாடி ‘சர்ப்ரைஸ்’ ஆய்வு – அதிகாரிகளை திடுக்கிட வைத்த மேயர் ஜெகன்!”

ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்கள்!!

  • Share on

Trending News