Breaking News

விவசாயமே நாட்டின் உயிர்நாடி – 90 நாட்கள் விற்பனை கண்காட்சி துவக்கத்தில் மேயர் ஜெகன் உரை!!

  • Share on

தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாடு வங்கியான நபார்டு சார்பில் தூத்துக்குடி பெரிசன் பிளாசாவில் நடத்தப்படும் விற்பனை கண்காட்சியை மாநகராட்சி மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார். இதையடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவியும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பேசுகையில், இந்த விற்பனை கண்காட்சி மூன்று மாதங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டு முதல் நெய்தல் விழா தொடங்கியதிலிருந்து இந்த வகை கண்காட்சிகள் நடைபெற்று வருவதாகவும், நெய்தல் விழாவில் நான்கு நாட்களிலேயே அனைத்து பொருட்களும் விற்று தீர்ந்த அனுபவம் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நபார்டு மற்றும் கூட்டுறவு வங்கிகள் கடன் உதவி வழங்கி வருவதாகவும், இதன் மூலம் தொழில் செய்பவர்கள் லாபம் பெற்று கடனை திருப்பிச் செலுத்தி முன்னேறி வருவதாகவும் மேயர் குறிப்பிட்டார். இன்றைய போட்டி நிறைந்த உலகில் மார்க்கெட்டிங் செய்து பொருட்களை விற்பனை செய்வதே வெற்றியின் அடிப்படை என்றும் அவர் கூறினார்.

கடலில் உள்ள மாலத்தீவு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட அனுபவத்தை பகிர்ந்த மேயர், பவளப்பாறை வளர்ப்பதற்காக நிதி உதவி வழங்கப்பட்டு தொழிலாளர்கள் ஊக்குவிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்த கண்காட்சியில் வித்தியாசமான மற்றும் பயனுள்ள பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், 90 நாட்கள் தொடர்ந்து விதவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்கள் இந்த கண்காட்சியை முழுமையாக பயன்படுத்தி, உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இதேபோல் மேலும் பல தொழில் முனைவோர்களை வளர்த்தெடுக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றும் மேயர் ஜெகன் கேட்டுக் கொண்டார். விவசாயம் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும்; விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, நபார்டு வங்கி பொது மேலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி தேர்மாறன் பிறந்தநாள்: முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை!!

“என் வாக்குச்சாவடி… வெற்றி வாக்குச்சாவடி” – ஒட்டப்பிடாரம் மேற்குப் ஒன்றியத்தில் பூத் கமிட்டி ஆலோசனை!!

  • Share on

Trending News