தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் குமாரகிரி ஊராட்சி ஜன்னத்துள் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் தெருக்களில் மழைநீர் தேங்கி, உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜன்னத்துள் நகரை சேர்ந்த பெண் ஒருவர் பிரச்சினையை தொலைபேசியில் தெரிவிக்க, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.
அவர் நேரில் ஜன்னத்துள் நகருக்கு சென்று மழைநீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து, முதல் கட்டமாக JCB இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், மழைநீர் வெளியேறிய உடன் தெருவில் சரள் அடித்து மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து,
1. புதுக்கோட்டை தெற்கு தெரு நியாயவிலைக்கடை முன்புறம்
2. சிறுப்பாடு மசூதி எதிர்புறம்
3. ஈசாக்கு நகர்
4. கலாம் நகர் – 1 & 2வது தெருக்கள்
ஆகிய பகுதிகளிலும் நேரில் சென்று பார்வையிட்டு மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஏற்பாடு செய்து, உடனடி சரள் அடிக்கும் பணிகளுக்கும் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி, ஊராட்சி செயலர் நாராயணன், ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.