தூத்துக்குடி திருமந்திரநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஐப்பசி மாத திருவிழா ஆன்மிக மகிழ்வுடன் நடைபெற்று வருகிறது.
இன்று (13.11.2025) காலை நடைபெற்ற திருத்தேர் ரதாரோஹணம் மற்றும் தேரோட்ட பவனி விழா பக்தி பூர்வமாக, கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி வசந்தி திருத்தேரை வடம்பிடித்து பவனியை தொடங்கி வைத்து விழாவை சிறப்பாக துவக்கி வைத்தார்.
இந்த பவனியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இந்துசமய அறநிலையத்துறை அலுவலர் மு.வள்ளிநாயகம், தக்கார் தமிழ்ச்செல்வி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இறை பணியில் ஈடுபட்டனர்.
பவனியில் திரளாக வந்திருந்த பக்தர்கள் “ஓம் நமஃ சிவாய” என முழங்கினர். தீபாராதனை வழிபாடுகளில் ஈடுபட்டு இறை அருளைப் பெற்றனர். அதே நேரத்தில், சகா கலைக்குழு கலைஞர்கள் பவனியில் சிறப்பாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் ஆன்மீக கலைகளை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தனர். இவர்களின் இசை, நடனம், பக்தி பாடல்கள் ஆகியவை பவனியில் ஆன்மீகத் தாளத்தை உருவாக்கின.
தேரோட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தூத்துக்குடியில் திடீரென கனமழை பெய்தது. “தேரோட்டம் தொடங்கும் போது மழை நின்றால் நன்றாக இருக்கும்” என்று பக்தர்கள் மனமார வேண்டிக் கொண்டனர். அதிசயமாக, தேரோட்டம் தொடங்கும் தருணத்தில் மழை நின்றது! நீதிபதி வசந்தி தேர் வடம் பிடித்து பவனியை தொடங்கியவுடன் வானம் தெளிந்தது. பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் களித்தனர்.
பவனி முழுவதும் மழை பெய்யாமல் நடைபெற்றது. தேர் பவனி நிறைவு பெற்று தன் இடத்திற்கு வந்ததும், மீண்டும் லேசான மழை பொழிந்தது. இதை “இறைவன் அருளால் நிகழ்ந்த அதிசயம்” என பக்தர்கள் கூறி ஆனந்தக் களிப்பில் திளைத்தனர்.
திருவிழாவின் நிறைவாக வரும் நவம்பர் 15 (சனிக்கிழமை) அன்று மாலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் உத்திர நட்சத்திரம் – ஏகாதசி கூடிய சுபநாளில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
பெரும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு இறை அருளைப் பெற விழா நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.