தூத்துக்குடி நகரின் கல்வி மரபில் சிறப்பு மிக்க வ.உ. சிதம்பரனார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழைய மாணவர் சந்திப்பு, இனிய நினைவுகளின் பெருவிழாவாக களைகட்டியது.
1934ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, நகரின் கல்வி வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பு செய்து வருகிறது. 90 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்கி வந்த இந்த நிறுவனம், முன்னாள் மாணவர்களின் சந்திப்பால் சனிக்கிழமையன்று பண்டிகை வீச்சில் திளைத்தது.
25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் கல்வி பயின்ற 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். பள்ளியின் பழைய தோழர்களை மீண்டும் சந்தித்த அவர்களின் முகங்களில் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த உணர்வு பொங்கி வழிந்தது. சிலர் வெளிநாடுகள், வெளிநகரங்களிலிருந்து கூட வந்து கலந்து கொண்டனர்.
நண்பர்களுடன் பழைய Bench நினைவுகள், வகுப்பறை சுவர்கள், ஆசிரியர் சொல்லிய சுவாரஸ்யங்கள் — அனைத்தும் மீண்டும் நினைவில் வந்தது. குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் தங்கள் பள்ளி வாழ்க்கையை பெருமையுடன் அறிமுகப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் திருமதி டி. வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் கே. வள்ளியம்மாள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சங்கரேஸ்வரி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம் மற்றும் டி. சோமநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஜெபத்தாய், ஜோதி, சந்திரா, வள்ளியம்மாள், கல்யாணி, சொர்ணம், வேலம்மாள், முத்துஸ்ரீவரமங்கை ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் கண்ணன், ராம்பாபு, வீரபாகு, மாரிச்செல்வம், வீரமுத்துராஜா, ஆறுமுகம், வடிவுக்கரசி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கு கலந்து கொண்ட அனைவரும் நன்றியை தெரிவித்தனர்.
பள்ளி மைதானம் முழுவதும் சிரிப்பு, நினைவுகள், நட்பு மூன்றும் கலந்த ஒரு இனிய சந்திப்பாக “சி.எம். பள்ளி பழைய மாணவர் மீள்சேர்க்கை” அனைவருக்கும் மறக்க முடியாத நாளாக மாறியது.