தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாமல் இருக்கும் சலுகை விலை வீட்டுமனை திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, வரும் அக்டோபர் 23ஆம் தேதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தூத்துக்குடி பிரஸ் கிளப் முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் செயற்குழு கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில், அரசின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு நான்கு கட்டங்களாக சலுகை விலை வீட்டுமனை வழங்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக அதுபோன்ற நன்மை வழங்கப்படாதது குறித்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
நிர்வாகிகள் எடுத்துரைத்த விவாதங்களுக்குப் பிறகு, தமிழக முதல்வர் மற்றும் மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அக்டோபர் 23ஆம் தேதி தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்கான அனுமதி கடிதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது.
மேலும், வரும் தீபாவளியை முன்னிட்டு, கடந்த ஆண்டைப் போல ஸ்பான்சர் மூலம் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்புகள் வழங்க தீர்மானம் செய்யப்பட்டது. அதேபோல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக அவர்கள் பணி நிலை மற்றும் தகுதிகளை ஆய்வு செய்து, பொதுக்குழுவின் ஒப்புதலுடன் சேர்க்க தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்கு உறுப்பினர்கள் குமார், கண்ணன், முத்துராமன், ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.