தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி – மஹா காலபைரவர் சித்தர் பீடத்தில், வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் வழிபாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
தென்தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் வகையில் சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் இத்தலத்தில், சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் குருமகாலிங்கேஸ்வரருக்கும் நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் கோலாகலமாக நடைபெற்றன. மேலும், பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், மக்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் மஹா காலபைரவருக்கு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேக வழிபாடுகள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.