தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பெரும்பான்மை பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல் திட்டமிட்டு காலதாமதம் செய்து வரும் தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து கோவில்பட்டியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தலைமையேற்றார். கோவில்பட்டி நகர தலைவர் அருண்பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், “பாஜகவின் கைக்கூலியாக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை ஆட்டிப்படைக்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனநாயக மரபுகளை மதிக்க வேண்டும்” என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், விளாத்திகுளம் பெத்துராஜ், ஜான் பிரிட்டோ, ஓட்டப்பிடாரம் ஜேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தேசிய நெஞ்சங்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அரசியல் கவனத்தையும் ஈர்த்தது.