தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சி.த. செல்லப்பாண்டியன் அவரை ஆதரித்து தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் 3ம் மைல், அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசும்போது அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மதுபான கடைகளில் கூடுதல் விலை வசூலித்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. மக்கள் நலனை புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும், நகரில் பூங்காக்களின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் கூறினார்.
தூத்துக்குடி மாநகரில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து, மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்தார். மழை, வெள்ள காலங்களில் மக்களுடன் இருந்து உதவி செய்தது தானே என்றும், அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக வந்து நிலைமையை ஆய்வு செய்தார் என்றும் கூறினார். ஆனால் தற்போதைய ஆட்சியினர் மக்களின் பிரச்சினைகளில் அக்கறை காட்டவில்லை என்றார்.
வரவிருக்கும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளூர் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.