தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பாஜக ஊடகப்பிரிவு கன்னியாகுமரி பெருங்கோட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை மத்திய மாவட்ட தலைவர் சசி அவர்கள் கலந்து கொண்டார்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, NDA கூட்டணியின் வெற்றியை நோக்கமாகக் கொண்டு பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா அவர்கள், “சட்டமன்றத் தேர்தலில் ஊடகப்பிரிவு மிக முக்கியமான பங்காற்றுகிறது. கட்சியின் சாதனைகள், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு தெளிவாக கொண்டு செல்லப்பட வேண்டும். சமூக ஊடகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் அனைத்தையும் திறம்பட பயன்படுத்தி தகவல்களை விரைவாக பரப்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், எதிர்க்கட்சிகள் பரப்பும் தவறான தகவல்களுக்கு உடனடி பதிலளித்து உண்மையை வெளிப்படுத்துவது ஊடகப்பிரிவின் முக்கிய கடமையாகும் என்றும் கூறினார். ஒவ்வொரு வாக்குச்சாவடி மட்டத்திலும் ஊடகப் பொறுப்பாளர்கள் செயல்பட்டு, வாக்காளர்களை நேரடியாக சென்றடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களை ஈர்க்க புதுமையான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதையும், உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
ஒழுங்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்ந்து செயல்படுதல் மூலம் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ரத்தின முரளி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாவட்ட துணைத் தலைவர் சரவணபெருமாள், மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், பாலகிருஷ்ணன், மாரிமுத்து உள்ளிட்டோர் மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஊரகப் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஊடகப்பிரிவு பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.