Breaking News

“முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டரா?” – தூத்துக்குடி மாநகராட்சியைச் சுற்றி சர்ச்சை; ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணையர் நியமனம்!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:


தூத்துக்குடி மாநகராட்சியால் கடந்த 04.04.2025 அன்று மின்னணு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் ஐந்து பணிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில் 1, 2 மற்றும் 5-வது எண்களில் இடம்பெற்ற பணிகளாக, தூத்துக்குடி மாநகராட்சி 12-வது வார்டு பி.என்.டி. நகரில் பூங்கா அமைத்தல், மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறச் சாலையில் நடைபாதை பயிற்சிக்காக தார் சாலை அமைத்தல் மற்றும் கருப்பட்டி சொசைட்டி ஜங்ஷனில் உள்ள போக்குவரத்து வட்டப்பாதைக்கு வேலி அமைத்து மின்விளக்குகள் நிறுவுதல் ஆகிய பணிகளுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆனால், இந்த பணிகள் அனைத்தும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு கடந்த 17.02.2025 அன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் முன்னிலையில் திறப்பு விழா நடத்தப்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்காக மீண்டும் டெண்டர் விடுவது முறைகேடானது என்பதால், அந்த பணிகளுக்கான டெண்டர்களை ரத்து செய்யுமாறு கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவும் பெறப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வில் இன்று (11.03.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஆஜராகி அரசுத் தரப்பில் வாதிட்டார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து, குறிப்பிட்ட மூன்று பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் 18.03.2026க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.


தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் ஆணையரை நியமித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  • Share on

அமைச்சர் கீதா ஜீவன் – எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ இணைந்து மாப்பிள்ளையூரணியில் 528 புதிய வீடுகள் திறப்பு; சாலை மேம்பாட்டு பணிக்கும் துவக்கம்!!

பாத்திமா நகர் ஆலய தேர்தல் சர்ச்சை: புல்டன் ஜெசின் மீது நடவடிக்கை கோரி தெற்கு காவல் நிலையத்தில் புகார்!!

  • Share on

Trending News