தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழூர் ரயில்வே நிலையம் செல்லும் சாலை மற்றும் ரோஜ் பூங்காவிலிருந்து Central Marine Fisheries Research Institute – தூத்துக்குடி மண்டல மையம் வரை உள்ள பகுதிகள் நீண்ட நாட்களாக இருள் சூழ்ந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடற்கரைச் சாலை, தூத்துக்குடி நகரிலிருந்து துறைமுகம், துறைமுக குடியிருப்பு மற்றும் அனல் மின்நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் முக்கியப் பாதையாகும். சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை சாலை சேதமடைந்துள்ளதுடன், குறிப்பாக 8 மின் கம்பங்களில் தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் முழுமையான இருள் நிலவுகிறது.
இதனால் வாகன விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சிலர் பைக் ரேஸ் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டும் சம்பவங்களும் நடைபெறுகின்றன என கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு மருத்துவர் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் இதே பகுதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், கீழூர் ரயில்வே நிலைய நுழைவாயிலில் இருந்து ராஜம் திருமண மண்டபம் வரை தெருவிளக்குகள் எரியாமல் பல நாட்களாக இருள் சூழ்ந்துள்ளது. பலமுறை மாநகராட்சிக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தினமும் இரவு நேரங்களில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் Muthunagar Express பயணிகள் இந்தச் சாலையை பயன்படுத்தி ரயில் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் தனியாக செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக தெருவிளக்குகளை பழுதுபார்த்து, சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, இந்த பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண மாநகராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.