தூத்துக்குடி நகரின் வரலாற்று பெருமையை தாங்கி நிற்கும் மதுரா கோட்ஸ் நூற்பாலை நிலத்தை அரசே மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி “மதுரா கோட்ஸ் நில மீட்பு இயக்கம்” சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட மதுரா கோட்ஸ் நூற்பாலை, இந்திய அளவில் சிறப்பு பெற்ற தொழிற்சாலையாக விளங்கியது. 1908 ஆம் ஆண்டு தொழிலாளர் போராட்டம் வ.உ. சிதம்பரனார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தது வரலாற்றுச் சம்பவமாகும்.
சுமார் 2400 தொழிலாளர்கள் முழுநேர பணியாளர்களாக பணியாற்றி வந்த இந்த ஆலை, சமீபத்தில் திடீரென மூடப்பட்டது.
தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் பலமுறை போராட்டங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இறுதியில் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வே எண் 140 முதல் 174 வரை சுமார் 7 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிலம், மாநகராட்சி பதிவேட்டில் ‘சர்க்கார் புறம்போக்கு’ என பதிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதன் மதிப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.
தற்போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் Velavan Hyper Market Private Limited நிறுவனம், இந்த நிலத்தை மோசடி ஆவணங்கள் மூலம் கைப்பற்ற முயற்சி செய்து, வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி கமிஷனர், கோட்டாட்சியாளர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
இந்த நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “மதுரா கோட்ஸ் நில மீட்பு இயக்கம்” சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மக்கள் நல இயக்க மாநில தலைவர் சாமு காந்தி தலைமை தாங்கினார். புரட்சி பாரதம் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மாரி செல்வம் முன்னிலை வகித்தார். எம்.எல். தோழர் மின்னல் அம்சத் வரவேற்புரை ஆற்றினார்.
பாட்டாளி மக்கள் கட்சி மாநில கொள்கை விளக்க அணி தலைவர் வியனஅரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினார். தமிழ்நாடு மீனவர் மக்கள் கட்சி நிறுவனர் கோல்டன் பரதர், விடுதலைச் சிறுத்தை கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் விமல் வங்காளியார், ஓட்டப்பிடாரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சார்லஸ், வழக்கறிஞர் முனீஸ் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மக்கள் அதிகார கழகத்தின் தாளமுத்து செல்வா, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கெமிஸ்ட்ரன், தூத்துக்குடி சம்சுதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்பி, தமிழக கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க தலைவர் பிரின்ஸ், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்கையா ஆகியோர் எழுச்சி உரை நிகழ்த்தினர்.
சமம் குடியல் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜான் ராயன், தாளமுத்து நகர் பொன்ராஜ், தமிழ்நாடு மக்கள் நல இயக்க மாநில செயலாளர் ஹரிராம், தமிழக மக்கள் இயக்க நிறுவனர் அர்ஜுனன், மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு, மதுரா கோட்ஸ் அரசு நிலத்தை உடனடியாக மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். முடிவில் தோழர் மின்னல் அம்ஜத் நன்றி உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி நகரில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.